டபுள் பவுன்ஸ் பந்தை சிக்ஸ் அடிக்கிறான்; வெட்கமே இல்லாம அதை சப்போர்ட் பண்ற! லாங்கரை வறுத்தெடுத்த வக்கார் யூனிஸ்

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 6:51 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் முகமது ஹஃபீஸின் கையிலிருந்து நழுவி டபுள் பவுன்ஸ் ஆகிவந்த பந்தை டேவிட் வார்னர் சிக்ஸர் விளாசினார். ஆட்ட ஸ்பிரிட் இல்லாத அந்த ஷாட்டை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டிய நிலையில், ஜஸ்டின் லாங்கரை கடுமையாக விமர்சித்துள்ளார் வக்கார் யூனிஸ்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் வார்னர் சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்தார். மேத்யூ வேட் 19வது ஓவரில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பவுலிங்கில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி போட்டியை முடித்தார்.

அந்த போட்டியில் வார்னர் அடித்த ஒரு சிக்ஸர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது, முகமது ஹஃபீஸ் வீசிய 8வது ஓவரின் முதல் பந்து அவரது கையிலிருந்து வழுக்கிக்கொண்டு சென்றதால், இரண்டு முறை பிட்ச் ஆனதுடன் லெக் ஸ்டம்பை விட்டு வெகுதூரம் விலகி வெளியே சென்றது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் வீசுவதைவிட மோசமான பந்தாக இருந்தாலும், அதையும் விடாமல் விரட்டிச்சென்று சிக்ஸர் அடித்தார் வார்னர். 

அதை வார்னர் அடிக்கவில்லை என்றால் டெட் பால் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பவுலரின் கையிலிருந்து வெளிவந்த பின்னர் அந்த பந்து எப்படி சென்றாலும், அதை அடிப்பது பேட்ஸ்மேன் அடிப்பது அவரது உரிமை. எனவே அந்தவகையில், வார்னரின் ஷாட்டுக்கு சிக்ஸர் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த ஷாட் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு எதிரானது என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இது வேட்கக்கேடானது என கம்பீர் கூட விமர்சித்திருந்தார்.

வார்னரின் அந்த ஷாட், கிரிக்கெட்டில் தான் பார்த்த சிறந்த சம்பவங்களில் ஒன்று என்று அந்த ஷாட்டை வெகுவாக புகழ்ந்திருந்தார் கோச் ஜஸ்டின் லாங்கர்.

ஜஸ்டின் லாங்கரின் இந்த செயல் வக்கார் யூனிஸை செம கடுப்பாக்கியுள்ளது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள வக்கார் யூனிஸ், இதுமாதிரியான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு எதிரான விஷயங்களை ஊக்குவிப்பது மோசமான செயல். இதை பார்த்து கிரிக்கெட் ஆடும் வளர்ந்துவரும் சிறுவர்கள், இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று வக்கார் யூனிஸ் விமர்சித்துள்ளார்.

click me!