மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர்? வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 4:32 PM IST
Highlights

மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் ஆடுவது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் இருபெரும் எதிரி அணிகள் இந்தியா - பாகிஸ்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும். இரு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றி வேட்கையில் கடுமையாக போராடுவார்கள். இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அது வெறும் விளையாட்டு போட்டியல்ல; ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம்.

1980-90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 1990களின் பிற்பகுதி மற்றும் 2000ம் ஆண்டுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது. 

2013ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியில் சுமூக உறவு இல்லாத நிலையில், 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவே தவிர, இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களின் கருத்தாகவும் உள்ளது. இதுதொடர்பான தங்களது விருப்பங்களை பல முன்னாள் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்துவருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க ரீதியான உறவை ஒதுக்கிவைத்துவிட்டு, கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியிருந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பேசியுள்ள சௌரவ் கங்குலி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை நடத்துவது இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களின் கைகளில் இல்லை. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இருதரப்பு தொடர் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இருநாட்டு அரசாங்கங்கள் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமே தவிர, ரமீஸ் ராஜாவின் கையிலோ, எனது கையிலோ எதுவுமே இல்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!