தொடர் நாயகன் விருது அவருக்கு அல்லவா கொடுத்துருக்கணும்..! வார்னருக்கு ஏன் கொடுத்தீங்க..? அக்தர் வயிற்றெரிச்சல்

Published : Nov 15, 2021, 02:43 PM ISTUpdated : Nov 15, 2021, 02:51 PM IST
தொடர் நாயகன் விருது அவருக்கு அல்லவா கொடுத்துருக்கணும்..! வார்னருக்கு ஏன் கொடுத்தீங்க..? அக்தர் வயிற்றெரிச்சல்

சுருக்கம்

டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு கொடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.  

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளுமே பார்க்கப்பட்டன.

ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டில் பெரிதாக ஜொலிக்காததால் அந்த அணியை டாப் 2-3 ஆப்சன்களாக எந்த முன்னாள் வீரர்களும் மதிப்பிடவேயில்லை. ஆனால் பேட்டிங்கில் வார்னர், மார்ஷ் மற்றும் பவுலிங்கில் ஆடம் ஸாம்பா, ஹேசில்வுட் ஆகியோரின் அபாரமான பங்களிப்பால் முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடந்த ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டேவிட் வார்னரை கேப்டன்சியிலிருந்து ஒதுக்கியது மட்டுமல்லாது அவர் ஃபார்மில் இல்லை என்பதற்காக அவரை ஆடும் லெவனிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார். டேவிட் வார்னரின் மோசமான ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலக கோப்பையில் கவலையளிக்கும் விதமாக இருந்தது.

ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். முக்கியமான நாக் அவுட் போட்டிகளான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி முறையே 49 மற்றும் 53 ரன்களை விளாசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்த தொடரில் 7 போட்டிகளில் ஆடி 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததற்காக, அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

ஆனால் தொடர் நாயகன் விருது, இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த பாபர் அசாமுக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது தவறான முடிவு என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.

இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்தது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான். இந்த தொடரில் சிறப்பாக ஆடிய அவர் 303 ரன்களை குவித்தார். ஆனால் பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது.

பாபர் அசாம் வார்னரை விட அதிக ரன்கள் அடித்திருந்தாலும், முக்கியமான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியில் முக்கிய பங்குவகித்தார் என்ற காரணத்திற்காக வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக, இறுதிப்போட்டியில் 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஃபின்ச் 5 ரன்னில் ஆட்டமிழந்தபோதும், பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் ஆடி அரைசதம் அடித்து ஆஸி., அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுபோன்ற சவாலான இலக்கை விரட்டும்போது எந்த சூழலிலும் ரன்ரேட் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை செவ்வனே செய்தார் வார்னர்.

உலக கோப்பையை ஒரு அணி வெல்ல காரணமாக இருந்த வீரருக்கு தொடர் நாயகன் விருதை வழங்காமல், அதிக ரன்கள் குவித்ததற்காக மட்டுமே தங்கள் நாட்டு வீரருக்கு தொடர் நாயகன் விருதை வழங்கியிருக்க வேண்டும் என்ற அக்தரின் நியாயம் ஏற்கத்தக்கதல்ல. ஆனால் அவரது கருத்து. அவ்வளவுதானே தவிர, இதில் பார்ப்பதற்கு வேறு எந்த நியாயமும் இல்லை.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav: 150 கிமீ வேகப்பந்து... அசால்ட்டா அடிச்ச 15 வயசு பையன்! ஆர்ச்சர் பந்தை சிதறடித்த வைபவ்
CSK vs PBKS: 200 ரன் அடிச்சும் CSK தோத்துப்போனது ஏன்? 5 காரணங்கள்!