T20 World Cup நீங்க நம்புறீங்களோ இல்லையோ.. சத்தியமா நான் சொன்ன மாதிரியே நடந்துருச்சு - ஃபின்ச் சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 2:13 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த உலக கோப்பை தொடரில் யார் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தான் கூறியதாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளுமே பார்க்கப்பட்டன.

ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டில் பெரிதாக ஜொலிக்காததால் அந்த அணியை டாப் 2-3 ஆப்சன்களாக எந்த முன்னாள் வீரர்களும் மதிப்பிடவேயில்லை. ஆனால் பேட்டிங்கில் வார்னர், மார்ஷ் மற்றும் பவுலிங்கில் ஆடம் ஸாம்பா, ஹேசில்வுட் ஆகியோரின் அபாரமான பங்களிப்பால் முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடந்த ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டேவிட் வார்னரை கேப்டன்சியிலிருந்து ஒதுக்கியது மட்டுமல்லாது அவர் ஃபார்மில் இல்லை என்பதற்காக அவரை ஆடும் லெவனிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார். 

டேவிட் வார்னரின் மோசமான ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலக கோப்பையில் கவலையளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வார்னர் மாதிரியான கிரேட் பிளேயர்களுக்கு ஃபார்ம் என்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை; முக்கியமான ஆட்டங்களில், முக்கியமான நேரங்களில் சிறப்பாக ஆடிவிடுவார்கள். அதைத்தான் இந்த உலக கோப்பை தொடரில் செய்தார் வார்னர்.

இந்த தொடர் முழுக்கவே மிகச்சிறப்பாக ஆடிய வார்னர், முக்கியமான நாக் அவுட் போட்டிகளான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் முறையே 49 மற்றும் 53 ரன்களை விளாசி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான ஃபைனலில் 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஃபின்ச் 5 ரன்னில் ஆட்டமிழந்தபோதும், பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் ஆடி அரைசதம் அடித்து ஆஸி., அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுபோன்ற சவாலான இலக்கை விரட்டும்போது எந்த சூழலிலும் ரன்ரேட் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை செவ்வனே செய்தார் வார்னர்.

ஃபார்மில் இல்லை என கருதப்பட்ட வார்னர், இந்த தொடரில் 289 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஃபார்மில் இல்லாத வார்னர், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது, ஆஸ்திரேலிய அணியினருக்கு பெரும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் கவலையாகவுமே இருந்திருக்கும். அவர் டி20 உலக கோப்பையில் எப்படி ஆடப்போகிறார் என்ற கவலை அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால் வார்னரை பற்றி கவலைப்படவே தேவையில்லை. வார்னர் மிகச்சிறப்பாக ஆடி, தொடர் நாயகன் விருதையே கூட வெல்வார்  என்று தங்களது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தான் நம்பிக்கையுடன் கூறியதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆரோன் ஃபின்ச், நான் கூறுவது பொய்யல்ல. சத்தியமாக சொல்கிறேன்.. டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம், வார்னரை பற்றி கவலைப்படாதீர்கள். அவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று கூறினேன். 

ஆடம் ஸாம்பாவிற்கு தொடர் நாயகன் விருது கொடுத்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் வார்னர் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் ஒரு ஃபைட்டர். இந்த தொடரின் கடைசி 2 முக்கியமான போட்டிகளில் அருமையாக ஆடி இந்த தொடரை சிறப்பாக முடித்துவைத்தார் என்று ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.
 

click me!