மிட்செல் மார்ஷ்-வார்னர் அபார பேட்டிங்! நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக T20 World Cup-ஐ வென்றது ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Nov 14, 2021, 11:08 PM IST
Highlights

மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடி அரைசதங்களால், நியூசிலாந்து நிர்ணயித்த 173 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
 

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடந்தது. நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியில் காயத்தால் வெளியேறிய விக்கெட் கீப்பர் டெவான் கான்வேவிற்கு பதிலாக டிம் சேஃபெர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஒரு கட்டாய மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி  களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செல் 11 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மார்டின் கப்டிலும், கேப்டன் கேன் வில்லியம்சனும் இணைந்து 10 ஓவர்கள் வரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடினர். அதனால் அந்த அணியின் ஸ்கோர் வேகமெடுக்கவில்லை.

10 ஓவரில் நியூசிலாந்து அணி வெறும் 57 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. கேன் வில்லியம்சன் 21 பந்தில் 21 ரன்கள் அடித்திருந்தபோது மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜோஷ் ஹேசில்வுட் தவறவிட, அதன்பின்னர் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடி நொறுக்கினார் வில்லியம்சன்.

மார்டின் கப்டில் 35 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக அடித்து ஆடிய கேன் வில்லியம்சன், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகிய இருவரின் பவுலிங்கையும் வெளுத்துவாங்கினார். இதற்கிடையே ஃபிலிப்ஸ்  17 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். மறுமுனையில் பெரியளவில் ஒத்துழைப்பு எதுவுமே இல்லாதபோதிலும், கேன் வில்லியம்சன் தனி நபராக அடித்து ஆடி, 48 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் அடித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

ஹேசில்வுட் கேட்ச்சை கோட்டைவிட்ட பின்னர் 27 பந்தில் 64 ரன்களை குவித்தார் வில்லியம்சன். கடைசி 2 ஓவர்களில் ஜிம்மி நீஷம் ஒரு சிக்ஸரும், டிம் சேஃபெர்ட் ஒரு பவுண்டரியும் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.

173 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் வெறும் 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டேவிட் வார்னரும் மிட்செல் மார்ஷும் இணைந்து நியூசிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கினர். ரன்ரேட் எந்த சூழலிலும் குறையாமல் பார்த்துக்கொண்ட இருவரும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த வார்னர் 38 பந்தில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்து அரைசதம் அடித்த மிட்செல் மார்ஷ் 50 பந்தில் 77 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடிய மேக்ஸ்வெல் 18 பந்தில் 28 ரன்கள் அடித்தார். 

19வது ஓவரில் 173 ரன்கள் என்ற இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
 

click me!