ஐசிசி தேர்வு செய்த டி20 உலக கோப்பை 2021ன் சிறந்த ஆடும் லெவன்! ஒரு இந்திய வீரர் கூட இல்லை.. கேப்டன் பாபர் அசாம்

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 8:57 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட இந்த தொடரின் சிறந்த ஆடும் லெவனை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசிசியின் இந்த ஆடும் லெவனில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய எந்த அணியும் கோப்பையை வெல்லவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளாவது அரையிறுதிக்கு சென்றன. ஆனால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றமளித்தன.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் அடைந்த படுதோல்விகளின் காரணமாக, அடுத்த 3 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளது ஐசிசி. அதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

டி20 உலக கோப்பை 2021-ன் தொடக்க வீரர்களாக, டேவிட் வார்னரும் ஜோஸ் பட்லரும் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  289 ரன்களை குவித்து, ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார் டேவிட் வார்னர். இந்த தொடருக்கு முன் ஃபார்மில் இல்லாமல் இருந்த வார்னர், உலக கோப்பையில் சிறப்பாக ஆடினார். இந்த உலக கோப்பையில் ஒரேயொரு வீரர் தான் சதமடித்தார். அது ஜோஸ் பட்லர். அந்தவகையில், வார்னர் மற்றும் பட்லர் ஆகிய இருவரையும் ஐசிசி இந்த தொடரின் சிறந்த தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளது.

3ம் வரிசையில் பாபர் அசாமை தேர்வு செய்துள்ள ஐசிசி, அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இலங்கை அணியில் சிறப்பாக ஆடிய சாரித் அசலங்கா மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டருக்கு வலுசேர்த்த மார்க்ரம் ஆகிய இருவரையும் முறையே 4 மற்றும் 5ம் வரிசைகளில் தேர்வு செய்துள்ள ஐசிசி, ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக மொயின் அலி மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரையும், ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவையும் தேர்வு செய்துள்ளது.

ஃபாஸ்ட் பவுலர்களாக ஜோஷ் ஹேசில்வுட், டிரெண்ட் போல்ட் மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய மூவரையும், 12வது வீரராக ஷாஹீன் அஃப்ரிடியையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி. இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

ஐசிசி தேர்வு செய்த டி20 உலக கோப்பையின் சிறந்த அணி:

டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர், பாபர் அசாம் (கேப்டன்), சாரித் அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, வனிந்து ஹசரங்கா, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், டிரெண்ட் போல்ட், அன்ரிக் நோர்க்யா.

12வது வீரர் - ஷாஹீன் அஃப்ரிடி.
 

click me!