பிளான் ஏ-வும் இல்ல பி-யும் இல்ல.. ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ-யின் அதிரடி திட்டம்

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 2:59 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்த பிசிசிஐயின் திட்டம் வெளியாகியிருக்கிறது. 

கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால், கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. 

பிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம்.

ஐபிஎல்லை முழுமையாக நடத்த முடியவில்லையென்றால், பிசிசிஐ பிளான் பி ஒன்றை வைத்துள்ளதாகவும், ஐபிஎல் தொடங்க தாமதமாகி, ஆனால் நடத்தக்கூடிய சூழல் இருந்தால், வழக்கமான போட்டிகளை விட குறைவான போட்டிகள் நடத்தப்படலாம்; அதுதான் அந்த பிளான் பி என்றும் தகவல் வெளியானது. 

ஆனால் எத்தனை போட்டிகள் எந்த மாதிரி நடத்தப்படும் என்பதெல்லாம் இப்போதே சொல்லமுடியாது. இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என்னவென்பதை அடுத்து பார்த்துக்கொள்வோம் என்று கங்குலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிளான் ஏ - பிளான் பி எல்லாம் இல்லை. போட்டிகளை குறைத்து நடத்து திட்டமெல்லாம் இல்லை. ஐபிஎல்லை நடத்தினால், முழு தொடரையும் நடத்தும் திட்டத்தில் தான் பிசிசிஐ இருப்பதாகவும், இப்போது முடியவில்லை என்றால், ஜூலை - செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் நடத்த பிசிசிஐ திட்டட்மிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல்லில் ஆடும் அனைத்து வீரர்களும் கலந்துகொள்ள வைக்கும் முனைப்பிலும் பிசிசிஐ இருக்கிறது. முக்கியமான நட்சத்திர வீரர்களோ வெளிநாட்டு வீரர்களோ இல்லாமல் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜூலை மாதத்திற்கு மேல் நடத்துவது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் அக்டோபரில் டி20 உலக கோப்பை இருக்கிறது. அதற்கிடையே, மற்ற அணிகளுக்கு இடையேயான, ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்ட போட்டிகளும் நடக்கவுள்ளன. அதனால் ஐபிஎல்லில் என்ன நடக்கிறது, ஐபிஎல் நடக்கிறதா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்போதைக்கு வெளிவரும் தகவல்கள் அனைத்துமே திட்டவட்டமான தகவல்கள் இல்லை.

click me!