டி20 போட்டியை ஒரே ஒரு ஆளு தலைகீழா மாத்திடலாம்.. இந்திய அணியில் அப்பேர்ப்பட்ட வீரர் இவருதான்.. சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 1:02 PM IST
Highlights

டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி அக்டோபர் 24ம் தேதி தொடங்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்திய நிலையில், உலக கோப்பையில் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. எனவே கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் சொந்த நாட்டிற்கு பத்திரமாக திருப்பியனுப்பப்பட்டனர். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர், இங்கிலாந்து - இலங்கை தொடர் ஆகியவையும் ரத்தாகின, 

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகமான பணம் புழங்கக்கூடிய ஐபிஎல் தொடர் இப்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல், அடுத்த மாதம் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 15ம் தேதியும் தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எனவே கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி தொடங்கப்படுமா என்ற சந்தேகம் எழும்பியது. ஆனால் டி20 உலக கோப்பை அக்டோபர் மாதம் தான் தொடங்குவதால் அதற்குள் கண்டிப்பாக நிலைமை சீராகிவிடும். எனவே டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி தொடங்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டவட்டமாக தெரிவித்தது. 

டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வை, ஐபிஎல்லை அடிப்படையாக கொண்டு சில வீரர்களை தேர்வு செய்யலாம் என அனைத்து அணிகளும் நினைத்திருந்த நிலையில், ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியிருக்கிறது.

எனினும் டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது மற்றும் இந்திய அணியின் பலம் குறித்து பேசியுள்ளார் சேவாக்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்கமுடியாது. ஏனெனில், அந்த குறிப்பிட்ட தினம் ஒரு வீரருக்கானதாக அமைந்துவிட்டால், ஒரேயொரு வீரரே போட்டியை தலைகீழாக மாற்றி, ஆட்டத்தின் முடிவை தீர்மானித்துவிடமுடியும். இது அந்த மாதிரியான ஃபார்மட். ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மிகப்பெரிய பலம். அவரது கம்பேக் இந்திய அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய அணியின் மொத்த காம்பினேஷனே ஹர்திக் பாண்டியாவால் வலுப்பெறும் என்று சேவாக் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றார். தனது உடற்தகுதியையும் ஃபார்மையும் நிரூபிக்கும் விதமாக டிஒய் பாட்டீல் டி20 தொடரில் காட்டடி அடித்து அசாத்தியமான இரண்டு இன்னிங்ஸ்களை ஆடினார். ஒரு போட்டியில் 37 பந்திலும் மற்றொரு போட்டியில் 39 பந்திலும் சதமடித்து அசத்தினார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கவிருந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். டி20 உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரும் நட்சத்திர வீரருமான ஹர்திக் பாண்டியா, முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பியிருப்பதோடு, டாப் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

click me!