நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம்

By karthikeyan VFirst Published Nov 12, 2021, 1:09 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

டி20 உலக கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி வரும் 14ம் தேதி ஃபைனலில் ஆடிய கையோடு, துபாயிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

வரும் 17, 19, 21 ஆகிய 3 தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பின்னர் வரும் 25ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி மும்பையில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான  இந்திய டி20 அணி கடந்த 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. டி20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மாவின் தலைமையில், புதிய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் இந்திய அணி ஆடும் முதல் தொடர் இதுதான்.

டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடிவரும் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி முதல் போட்டியில் மட்டும் ஆடவில்லை. அதனால் அந்த போட்டியில் அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்யவுள்ளார். 2வது டெஸ்ட்டில் கோலி ஆடுகிறார்.

சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல்முறையாக டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறாததால் விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத்துக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால் பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். கோலி(2வது டெஸ்ட்டில் மட்டும் ஆடுகிறார்), ரஹானே, புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். முதல் டெஸ்ட்டில் கோலி ஆடாததால் ஆடும் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.  ஹனுமா விஹாரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

விக்கெட் கீப்பர்களாக ரிதிமான் சஹா மற்றும் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ் ஆகிய நால்வரும், ஃபாஸ்ட் பவுலர்களாக இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய நால்வரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), புஜாரா, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

விராட் கோலி 2வது டெஸ்ட்டில் அணியில் இணைகிறார்.
 

click me!