ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 19வது ஓவரில் மேட்ச்சை முடித்த மேத்யூ வேட்! பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்கு சென்ற ஆஸி.,

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 11:23 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடந்தது.

துபாயில் 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது கடினம் என்பதால், 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது எளிதாக இருக்கும். அதனால் டாஸை வென்றால்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில், முக்கியமான டாஸை ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் வென்றார். டாஸ் வென்ற ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பெரிய ஸ்கோரை அடித்தால்தான், அதை 2வது இன்னிங்ஸில் கட்டுப்படுத்த முடியும் என்பதால் கடினமான இலக்கை நிர்ணயிக்க பெரிய ஸ்கோரை அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இணைந்து வழக்கம்போலவே சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 10 ஓவரில் 71 ரன்களை சேர்த்து கொடுத்தனர். பாபர் அசாம் 34 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு ரிஸ்வானும் ஃபகர் ஜமானும் இணைந்து அடித்து ஆடி 7.2 ஓவரில் 72 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரிஸ்வான் 52 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஆசிஃப் அலி (0), ஷோயப் மாலிக் (1) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், ஃபகர் ஜமான் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19வது ஓவரை பாட் கம்மின்ஸ் அருமையாக வீசி முக்கியமான அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த ஃபகர் ஜமான் 32 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாசினார். இதையடுத்து 20 ஓவரில் 176 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

177 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் முத்ல ஓவரில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கில் கோல்டன் டக் அவுட்டானார். அதன்பின்னர் வார்னருடன் இணைந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மிட்செல் மார்ஷை 28 ரன்னில் வீழ்த்திய பாகிஸ்தான் ஸ்பின்னர் ஷதாப் கான், ஸ்டீவ் ஸ்மித்தை 5 ரன்னிலும், அபாரமாக அடித்து ஆடிக்கொண்டிருந்த டேவிட் வார்னரை அரைசதம் அடிக்கவிடாமல் 49 ரன்னிலும், மேக்ஸ்வெல்லை 7 ரன்னிலும் வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார்.

அருமையாக வீசிய ஷதாப் கான், 4 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். அதன்பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் ஆகிய இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கவனமாக ஆடிய அதேவேளையில் அடித்தும் ஆடினர்.

ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் ஆகிய இருவருமே நெருக்கடியான சூழலை அருமையாக எதிர்கொண்டு பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினர். ஸ்டோய்னிஸ் 31 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்தார். கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி வீசிய 19வது ஓவரின் கடைசி 3 பந்தில் 3 சிக்ஸர்களை விளாசி, 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்துவைத்தார் மேத்யூ வேட். மேத்யூ வேட் 17 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாச, 19வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, வரும் 14ம் தேதி துபாயில் நடக்கும் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
 

click me!