ரிஸ்வான், ஃபகர் ஜமான் அதிரடி அரைசதம்..! அரையிறுதியில் ஆஸி.,க்கு கடின இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 9:24 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் முகமது ரிஸ்வான் மற்றும் ஃபகர் ஜமானின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 177 ரன்கள் என்ற கடினமான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடந்துவருகிறது.

துபாயில் 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது கடினம் என்பதால், 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது எளிதாக இருக்கும். அதனால் துபாயில் ஆடும்போது இலக்கை விரட்டுவது கடினம். அந்தவகையில், முக்கியமான டாஸை ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் வென்றார். டாஸ் வென்ற ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பெரிய ஸ்கோரை அடித்தால்தான், அதை 2வது இன்னிங்ஸில் கட்டுப்படுத்த முடியும் என்பதால் கடினமான இலக்கை நிர்ணயிக்க பெரிய ஸ்கோரை அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இணைந்து வழக்கம்போலவே சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 10 ஓவரில் 71 ரன்களை சேர்த்து கொடுத்தனர். பாபர் அசாம் 34 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு ரிஸ்வானும் ஃபகர் ஜமானும் இணைந்து அடித்து ஆடி 7.2 ஓவரில் 72 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரிஸ்வான் 52 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஆசிஃப் அலி (0), ஷோயப் மாலிக் (1) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், ஃபகர் ஜமான் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19வது ஓவரை பாட் கம்மின்ஸ் அருமையாக வீசி முக்கியமான அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த ஃபகர் ஜமான் 32 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாசினார்.

இதையடுத்து 20 ஓவரில் 176 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 177 ரன்கள் என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது. நெருக்கடி அதிகமான நாக் அவுட் போட்டியான அரையிறுதி போட்டியில் 177 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
 

click me!