நமது அணியின் பெரிய பிரச்னையே இதுதான்.. அதை சரிசெய்யணும்! பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் அசாம் ஆற்றிய உரை

By karthikeyan VFirst Published Oct 25, 2021, 3:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம் என்றும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணியின் நிலையற்ற தன்மை தான் பிரச்னையாக இருந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் கேப்டன் பாபர் அசாம்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை; ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்தவகையில், டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மீது அதீதமான எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த எதிர்பார்ப்பே இரு அணிகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிடும். அந்த அழுத்தத்தை எந்த அணி சிறப்பாக கையாண்டு ஆடுகிறதோ அந்த அணி தான் இதுவரை உலக கோப்பை தொடர்களில் ஜெயித்திருக்கிறது. அந்தவகையில், ஒருநாள் உலக கோப்பையில் மோதிய 7 முறையும், டி20 உலக கோப்பையில் மோதிய 5 முறையும் என மொத்தமாக உலக கோப்பைகளில் மோதிய 12 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பைகளில் 100% வின்னிங் ரெக்கார்டை வைத்திருந்தது.

அந்த ரெக்கார்டை நேற்றைய போட்டியில் தகர்த்தெறிந்தது பாகிஸ்தான். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பாக விளையாடியது. பவுலிங்கில் ஷாஹீன் அஃப்ரிடி அருமையாக பந்துவீசி, ஆரம்பத்திலேயே ரோஹித்(0) மற்றும் ராகுல்(3) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அரைசதம் அடித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியையும் ஷாஹீன் அஃப்ரிடி தான் அவுட்டாக்கினார். இந்திய அணியின் முக்கியமான 3 வீரர்களான ரோஹித், கோலி, ராகுல் ஆகிய மூவரையுமே வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸிலேயே அடித்தளத்தை அமைத்து கொடுத்தார் ஷாஹீன் அஃப்ரிடி.

பொதுவாக ஃபீல்டிங்கில் சொதப்பும் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக ஃபீல்டிங்கிலும் அசத்தியது. எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை வீசவைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அதை மிகச்சரியாக செயல்படுத்தியதால் தான் அபார வெற்றியை பெற்றது. பவுலிங், ஃபீல்டிங்கில் அசத்திய பின்னர், 2வது இன்னிங்ஸில் பாபர் அசாமும் ரிஸ்வானும் இணைந்து பேட்டிங்கில் பட்டையை கிளப்பினர். தொடக்க வீரர்களான இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழப்பதற்கான வாய்ப்புகளைக்கூட கொடுக்காமல் இன்னிங்ஸை முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்துமே அருமையாக இருந்ததுடன், பாபர் அசாமின் கேப்டன்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. களவியூகங்கள், ஃபீல்டிங் செட்டப், பவுலிங் சுழற்சி என அனைத்துமே அருமையாக இருந்தது.

டி20 உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், அவர்கள் அணியின் பெரிய பிரச்னையை நன்கு அறிந்து, அதை சுட்டிக்காட்டி தனது வீரர்களுக்கு சிறந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க - சர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க..! ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் சவுக்கடி பதில்

இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு பின்னர் ஓய்வறையில் பாகிஸ்தான் வீரர்களிடம் பேசிய கேப்டன் பாபர் அசாம், இந்தியாவிற்கு எதிரான வெற்றியால் யாரும் அதீத உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துவிட வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதுவே நமது அடுத்த போட்டியில் நமது வீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும். நிலையற்ற தன்மை தான் கடந்த காலங்களில் நமது பிரச்னையாக இருந்திருக்கிறது. அதை நாம் மாற்ற வேண்டும். விரைவில் அதை மாற்றுவோம் என நம்புகிறேன். நம்மால் முடியும். இன்றைக்கு நன்றாக ஆடினீர்கள் பாய்ஸ் என்றார் பாபர் அசாம்.

இந்தியாவிற்கு எதிரான வெற்றி மமதையில் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றுவிடக்கூடாது என்பதை வீரர்கள் மனதில் பதியவைக்கும்படி பேசியிருக்கிறார் பாபர் அசாம்.
 

click me!