சர்ச்சையா ஏதாவது வேணும்னா முன்னாடியே சொல்லிருங்க..! ரோஹித் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்விக்கு கோலியின் பதில்

By karthikeyan VFirst Published Oct 25, 2021, 3:15 PM IST
Highlights

ரோஹித் சர்மாவிற்கு பதில் இஷான் கிஷனை ஆடவைத்திருக்கலாமா? அதை செய்யாதது தவறு என்று நினைக்கிறீர்களா? என்ற ரிப்போர்ட்டரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
 

டி20 உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி பவுலிங்,  ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான முதல் வெற்றியை பெற்று சாதனையும் படைத்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்(0) மற்றும் ராகுல்(3) ஆகிய இருவரையும் இன்னிங்ஸின் முதல் மற்றும் 3வது ஓவர்களில் வீழ்த்தி ஆரம்பத்திலேயே இந்திய அணியை நிலைகுலைய செய்து, அதிலிருந்து கடைசிவரை மீண்டே வரமுடியாமல் செய்தார் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அதன்பின்னர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டின் பொறுப்பான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி  20 ஓவரில் 151 ரன்கள் அடித்தது. அந்த இலக்கை பாகிஸ்தானின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவருமே அடித்துவிட்டனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பேட்டிங்கில் சரியான தொடக்கம் கிடைக்காததும், 2வது இன்னிங்ஸில் பனி காரணமாக பவுலர்களால் திட்டமிட்டபடி பந்துவீசமுடியாததுமே காரணமாக அமைந்தது.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க ஜோடி குறித்த பல விவாதங்கள் நடந்தன. ரோஹித்துடன் தானே தொடக்க வீரராக இறங்கப்போவதாக அறிவித்திருந்த கேப்டன் கோலி, ஐபிஎல்லில் ராகுலின் ஃபார்மை பார்த்தபின்னர், ராகுலே தொடக்க வீரராக இறங்குவார் என்பதை உறுதி செய்தார்.

ஐபிஎல்லில் ஃபார்மில் இல்லை என்றாலும் கூட, துணை கேப்டன் ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர். அவரை மாற்றுவது குறித்து யோசிக்கவே முடியாது. ஆனால் இஷான் கிஷன் இந்திய அணியில் எடுக்கப்பட்டபோது, தன்னை தொடக்க வீரராகத்தான் எடுத்திருப்பதாக கோலி கூறியதாக இஷான் தெரிவித்திருந்தார். அது, இஷான் தொடக்க வீரர் என்றால் ரோஹித், ராகுல் ஆகிய இருவரில் யாரின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் என்ற விவாதத்தை கிளப்பியது.

ஆனால், டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரோஹித் - ராகுல் தான் தொடக்க ஜோடி என்பதை கோலி உறுதி செய்துவிட்டார். ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் அரைசதம் அடித்து ரோஹித்தும் ஃபார்முக்கு வந்ததையடுத்து, இந்திய அணி நிம்மதியடைந்தது.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித்தும் ராகுலும் ஏமாற்றமளித்தனர். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவர்களது நீக்கம் பற்றி யோசிக்கமுடியாது. ஏனெனில் அவர்கள் இருவரும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் ரிப்போர்ட்டர் ஒருவர், ரோஹித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனை ஆடவைக்காதது தவறு என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை இஷானை சேர்த்திருந்தால், ரோஹித்தைவிட நன்றாக ஆடியிருப்பாரோ? என்று கோலியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கோலி, மிக துணிச்சலான கேள்வி. நீங்கள் என்ன நினைக்கிறீங்க சார்? நான் தேர்வு செய்து ஆடிய அணி தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அந்த ரிப்போர்ட்டர், நான் இதை ஒரு தெளிவிற்காக கேள்வியாகத்தான் கேட்கிறேனே தவிர, கருத்தெல்லாம் சொல்லவில்லை என்றார்.

இதையும் படிங்க - T20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்..! கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்

அதற்கு பின் பேசிய கோலி, சர்வதேச டி20 போட்டியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்குவீர்களா? கடைசி போட்டியில்(ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டி) கூட அவர் எப்படி ஆடினார் என்று தெரியுமா? உங்களுக்கு சர்ச்சையாக ஏதாவது வேண்டுமென்றால், முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். அதற்கேற்றவாறு பதிலளிக்கிறேன் என்றார் கோலி.
 

Droping rohit for ishan..??
Look at Virat Reply. 😂 pic.twitter.com/fwJtvxOpYc

— Rahul tanwar (@rahultanwar_09)
click me!