T20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்..! கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Oct 25, 2021, 2:29 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை; ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்தவகையில், டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மீது அதீதமான எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த எதிர்பார்ப்பே இரு அணிகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிடும். அந்த அழுத்தத்தை எந்த அணி சிறப்பாக கையாண்டு ஆடுகிறதோ அந்த அணி தான் இதுவரை உலக கோப்பை தொடர்களில் ஜெயித்திருக்கிறது. அந்தவகையில், ஒருநாள் உலக கோப்பையில் மோதிய 7 முறையும், டி20 உலக கோப்பையில் மோதிய 5 முறையும் என மொத்தமாக உலக கோப்பைகளில் மோதிய 12 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பைகளில் 100% வின்னிங் ரெக்கார்டை வைத்திருந்தது.

அந்த ரெக்கார்டை நேற்றைய போட்டியில் தகர்த்தெறிந்தது பாகிஸ்தான். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பாக விளையாடியது. பவுலிங்கில் ஷாஹீன் அஃப்ரிடி அருமையாக பந்துவீசி, ஆரம்பத்திலேயே ரோஹித்(0) மற்றும் ராகுல்(3) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அரைசதம் அடித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியையும் ஷாஹீன் அஃப்ரிடி தான் அவுட்டாக்கினார். இந்திய அணியின் முக்கியமான 3 வீரர்களான ரோஹித், கோலி, ராகுல் ஆகிய மூவரையுமே வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸிலேயே அடித்தளத்தை அமைத்து கொடுத்தார் ஷாஹீன் அஃப்ரிடி.

பொதுவாக ஃபீல்டிங்கில் சொதப்பும் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக ஃபீல்டிங்கிலும் அசத்தியது. எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை வீசவைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அதை மிகச்சரியாக செயல்படுத்தியதால் தான் அபார வெற்றியை பெற்றது. பவுலிங், ஃபீல்டிங்கில் அசத்திய பின்னர், 2வது இன்னிங்ஸில் பாபர் அசாமும் ரிஸ்வானும் இணைந்து பேட்டிங்கில் பட்டையை கிளப்பினர். தொடக்க வீரர்களான இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழப்பதற்கான வாய்ப்புகளைக்கூட கொடுக்காமல் இன்னிங்ஸை முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.

இதையும் படிங்க - T20 World Cup அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும்..? இயன் சேப்பல் கணிப்பு

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்துமே அருமையாக இருந்ததுடன், பாபர் அசாமின் கேப்டன்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. களவியூகங்கள், ஃபீல்டிங் செட்டப், பவுலிங் சுழற்சி என அனைத்துமே அருமையாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, திட்டங்களையும் வியூகங்களையும் நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. 2வது இன்னிங்ஸில் பனி தாக்கத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணி அபாரமாக ஆடியது. பவுலிங்கில் மிகச்சிறப்பாக தொடங்கினார்கள். தொடக்கத்திலேயே 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழப்பது நல்ல தொடக்கம் கிடையாது. நாங்களும் ஆரம்பத்திலேயே விக்கெட்டை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பாபரும் ரிஸ்வானும் வாய்ப்பே கொடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் பந்து பேட்டிற்கு வரவில்லை. எனவே பேட்டிங் ஆட கடினமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக பேட்டிங் எளிதாக இருந்தது. கூடுதலாக 15-20 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதைச்செய்ய பாகிஸ்தான் பவுலர்கள் அனுமதிக்கவில்லை.

அணி காம்பினேஷன் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒரு மிதவேகப்பந்துவீச்சாளரை(ஷர்துல் தாகூர்) எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் எங்கள் அணியின் பலம் என்னவென்பதை நிதானத்துடன் அறிந்து நாங்கள் செயல்பட வேண்டும். இந்தமாதிரி கண்டிஷனில் மிதவேகப்பந்துவீச்சாளர் கண்டிப்பாக சிரமப்பட்டிருப்பார். இது இந்த உலக கோப்பை தொடரின் ஆரம்பம் தானே தவிர, முடிவு அல்ல என்று கோலி தெரிவித்தார்.
 

click me!