விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்தார் பாபர் அசாம்

By karthikeyan VFirst Published Jul 17, 2022, 5:48 PM IST
Highlights

விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் பாபர் அசாம், தற்போது மற்றுமொரு சாதனையை தகர்த்துள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் அறியப்பட்ட நிலையில், இவர்களுடன் பாகிஸ்தானின் பாபர் அசாமும் இணைந்துவிட்டார்.

ஜோ ரூட் கடந்த ஒன்றரை ஆண்டில் அபாரமாக விளையாடி சதங்களை குவித்துவரும் அதேவேளையில் விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். கடந்த இரண்டரை ஆண்டில் ஒரு சதம்  கூட கோலி அடிக்கவில்லை.

ஆனால் பாபர் அசாம் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். பேட்டிங்கில் கடந்தகால சாதனைகள் பலவற்றை கோலி முறியடித்துவந்த நிலையில், கோலி ஃபார்மில் இல்லாத இந்த 2 ஆண்டில், கோலியின் சாதனையையும் சேர்த்து தகர்த்துவருகிறார் பாபர் அசாம்.

இதையும் படிங்க - அந்த ஷாட்டை மொத்தமாவே தடை செய்யணும்..! அஷ்வின் கருத்துக்கு வலுசேர்க்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபாரமாக ஆடி சதமடித்த பாபர் அசாம், விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்துள்ளார். இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை  அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் சதத்தால் 218 ரன்கள் அடித்தது.

பாகிஸ்தான் அணியில் யாருமே சரியாக ஆடாத நிலையில், பாபர் அசாம் மட்டும் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி சதமடித்தார். 119 ரன்களை குவித்தார் பாபர் அசாம். பாகிஸ்தான் அணி அடித்த 218 ரன்களில் 119 ரன்கள் பாபர் அசாம் அடித்தது.

இந்த இன்னிங்ஸில் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் பாபர் அசாம். 228 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய பாபர் அசாம், 10 ஆயிரம் ரன்களை விரைவில் எட்டிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி, சர்வதேச அளவில் 5ம் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க - விராட் கோலியை நீக்குமளவிற்கு தில்லான தேர்வாளர் இந்தியாவில் பிறக்கவே இல்ல

விராட் கோலி 232 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதை முறியடித்து 228 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் எட்டினார். இந்த பட்டியலில் முதலிடத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ்(206 இன்னிங்ஸ்), ஹாஷிம் ஆம்லா(217 இன்னிங்ஸ்), பிரயன் லாரா (220 இன்னிங்ஸ்) மற்றும் ஜோ ரூட் (222 இன்னிங்ஸ்) ஆகிய நால்வரும் முதல் 4 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் பாபர் அசாம் 5ம் இடத்தில் உள்ளார்.
 

click me!