
விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சனை போலவே பாபர் அசாமும் 3 விதமான போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துவருகிறார்.
விராட் கோலிக்கு நிகராக ஒப்பிடப்படுகிறார் பாபர் அசாம். இந்நிலையில், அந்த ஒப்பீடு சரியானதுதான் என்பதை நிரூபிக்கும் விதமாக விராட் கோலி மற்றும் ஹாஷிம் ஆம்லாவின் ஒருநாள் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் அசாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது, அபாரமாக ஆடி சதமடித்து 103 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினார் பாபர் அசாம். இது ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 13வது சதம்.
தனது 76வது ஒருநாள் இன்னிங்ஸில் 13 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் பாபர் அசாம். இதன்மூலம் விரைவாக 13 ஒருநாள் சதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார். ஹாஷிம் ஆம்லா 83 ஒருநாள் இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 86 ஒருநாள் இன்னிங்ஸ்களிலும் 13 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். அவர்களின் சாதனையை தகர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் பாபர் அசாம்.