இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அஷ்வினுக்கு பயந்து, நட்சத்திர மிடில் ஆர்டர் வீரரை நீக்கிவிட்டு வேறு வீரரை அணியில் சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஸ்பின்னர் டாட் மர்ஃபி அறிமுகமாகியுள்ளார்.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமானவை என்பதால், ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள். குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் மிகவும் அபாயகரமான பவுலரான அஷ்வினை எதிர்கொள்ள, அவரை மாதிரியான ஒரு ஆஃப் ஸ்பின்னரான பரோடா வீரரான மகேஷ் பிதியாவை பந்துவீசவைத்து வலைப்பயிற்சியில் பயிற்சி செய்தனர்.
அஷ்வினை திறம்பட எதிர்கொண்டால் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறலாம் என்பது ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை. அந்தவகையில், அவர்களது முழுக்கவனமும் அஷ்வின் மீதே உள்ளது. குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஷ்வின் மிகச்சிறந்த ரெக்கார்டை வைத்திருக்கிறார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகச்சிறப்பாகவும், சாமர்த்தியமாகவும் பந்துவீசி அவர்களை எளிதாக வீழ்த்தவல்லவர் அஷ்வின்.
ஆஸ்திரேலிய மிடில் ஆர்டரை பொறுத்தமட்டில் ஸ்மித், லபுஷேன் ஆகிய 2 டாப் கிளாஸ் வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்கள். ஆஸ்திரேலிய மிடில் ஆர்டரின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட். ஆஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களுடன் சுமார் 3500 ரன்கள் அடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்டிங்கில் முக்கியமான வீரராக இருந்துவரும் டிராவிஸ் ஹெட் இடது கை வீரர் என்பதால், அஷ்வின் அவர் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்பதால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.
வலது கை பேட்ஸ்மேனான ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர் என்பதால் கூடுதல் பவுலிங் ஆப்சன் என்ற வகையிலும் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜாவை(1) சிராஜும், டேவிட் வார்னரை(1) ஷமியும் வீழ்த்தினர். 2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஸ்மித்தும் லபுஷேனும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.