நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடக்கும் 27ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்ததன் மூலமாக தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் 350 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 27ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் செய்தது. அதன்படி, டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில் ஹெட் தனது முதல் போட்டி என்ற ஒரு பதற்றம் கூட இல்லாமல் விளையாடினார். தொடர்ந்து இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினர்.
தரம்சாலாவில் சிக்ஸர் மழை – வான வேடிக்கை காட்டிய வார்னர், டிராஸ் ஹெட் – ஆஸி, 388 ரன்கள் குவிப்பு!
இந்த ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 175 ரன்கள் குவித்தது. வார்னர், 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் வார்னர் இடம் பெற்றுள்ளார். அவர் 36 சிக்ஸர்கள் வரையில் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் 33 சிக்ஸர்களும், ரோகித் சர்மா 40 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். அதிரடியாக விளையாடிய ஹெட் தனது முதல் உலக கோப்பை சதத்தை பதிவு செய்தார். அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஹெட் இடம் பெற்றார். அவர் 67 பந்துகளில் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்தவர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 36, ஸ்டீவ் ஸ்மித் 18, மார்னஷ் லபுஷேன் 18, கிளென் மேக்ஸ்வெல் 41, ஜோஸ் இங்கிலிஸ் 38, பேட் கம்மின்ஸ் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 3 முறை 350 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிராக 399/8 ரன்கள் குவித்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 367/9 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது. ஆஸ்திரேலியா மொத்தமாக 20 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதோடு, 32 பவுண்டரியும் அடித்துள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 19 சிக்ஸர்களும், 29 பவுண்டரிகளும் எடுத்திருந்தது.