நியூசிலாந்திற்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்துள்ளது.
தரம்சாலாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான உலகக் கோப்பையின் 27ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்தது. இதில் டேவிட் வார்னர் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். இதே போன்று டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களில் பட்டியலில் டிராவிஸ் ஹெட் இடம் பெற்றுள்ளார்.
அவர், 25 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 15 ஓவர்களில் ஆஸ்திரேலியா 155 ரன்கள் எடுத்திருந்தது. இதனை பார்க்கும் போது ஆஸ்திரேலியா 450 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்திரேலியா 175 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் ஆட்டமிழந்தார். இதில், வார்னர் 65 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸர்கள் உள்பட 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்தார். அவர் 59 பந்துகளில் சதம் அடித்தார். கடைசியாக டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் சேர்த்து கிளென் பிலிப்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். அவர் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோஸ் இங்கிலிஸ் 38 ரன்னில் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டார், ஆடம் ஜம்பா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 450 ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார்னர் மற்றும் ஹெட் விக்கெட்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் குறைய தொடங்கியது.
இந்தப் போட்டியில் 388 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் 3ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக நெதர்லாந்திற்கு எதிராக 399 ரன்கள் எடுத்திருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!