தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2ஆவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா முதலில் விளையாடி 212 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்கள் குவித்தார். ஹென்ரிச் கிளாசென் 47 ரன்கள் எடுத்தார்.
எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஆஸ்திரேலியா 6 ஓவருக்கு 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 6.1ஆவது ஓவரில் வார்னர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். மேலும், இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கோட்டைவிட்டனர். இதில் ஹெட் அரைசதம் அடித்த நிலையில், 62 பந்துகளில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஷ் லபுஷேன் 18 ரன்களில் வெளியேற, அதிரடி மன்னன் 200 குவித்து சாதனை படைத்த மேக்ஸ்வெல் 1 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
நிதானமாக விளையாடிய ஸ்மித் 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக ஆஸ்திரேலியா, 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Breaking: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா! pic.twitter.com/7XxCGlOy74
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
வரும் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணியானது கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் கோட்டவிட்டதே தோல்விக்கு காரணாமாக சொல்லப்படுகிறது.