இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு டிராஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.
தொடர்ந்து விளையாடிய ஹெட் 120 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் உள்பட 137 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். மார்னஷ் லபுஷேன் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது 6ஆவது முறையாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சாம்பியனாகியுள்ளது.