#INDvsENG அஷ்வினிடம் மண்டியிட்டு சரணடைந்த இங்கிலாந்து அணி.! வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடும் இந்தியா

By karthikeyan VFirst Published Feb 14, 2021, 3:28 PM IST
Highlights

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை வெறும் 134 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161), ரஹானே(67) மற்றும் ரிஷப் பண்ட்டின்(58) அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் அடித்தது. 

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் காலை முதல் செசனில் இந்திய அணி கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து ஆல்  அவுட்டாக, அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. பர்ன்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, அடித்து ஆடிய சிப்ளியை 16 ரன்னில் அஷ்வின் வீழ்த்தினார்.

அஷ்வின் வீசிய பந்து சிப்ளி எதிர்பார்த்ததை விட எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக, அதை சமாளிக்க முடியாமல் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சிப்ளி. அதன்பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் 6 ரன்னில் அக்ஸர் படேலின் சுழலில் வீழ்ந்தார்.

அறிமுக போட்டியில் ஆடும் அக்ஸர் படேல், தனது முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டாக, சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட்டை வீழ்த்தினார். உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் லாரன்ஸை 9 ரன்னில் அஷ்வின் வீழ்த்த, உணவு இடைவேளையின்போது, 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் அடித்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பின், 2வது செசனை ஸ்டோக்ஸும் போப்பும் தொடர்ந்தனர். 2வது செசன் தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்டோக்ஸை 18 ரன்னில் வீழ்த்தி அஷ்வின் விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். ஆலி போப்பை 22 ரன்னில் சிராஜ் வீழ்த்த, மொயின் அலி, ஜாக் லீச், ஆலி ஸ்டோன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழக்க, 134 ரன்களுக்கே சுருண்டது.  கடைசி 4 விக்கெட்டில் 2 பேரை அஷ்வின் வீழ்த்தினார். அஷ்வின் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 29வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். 

195 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி இந்திய அணி ஆடிவருகிறது.
 

click me!