#INDvsENG முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள்..! முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா

By karthikeyan VFirst Published Feb 14, 2021, 10:40 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்துவிட்டது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாக, ரோஹித்துடன் இணைந்து நன்றாக ஆடிய புஜாரா, லீச்சின் சுழலில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி மொயின் அலியின் சுழலில் டக் அவுட்டானார்.

86 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ரோஹித் சர்மா நிலைத்து ஆடி சதமடித்தார். 3 விக்கெட்டுக்கு பிறகு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரஹானே, அரைசதம் அடித்தார்.

சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய ரோஹித், 150 ரன்களை கடந்தார். ரோஹித்தும் ரஹானேவும் இணைந்து ஆடி 4வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர். இரட்டை சதத்தை நோக்கி ரோஹித்தும் சதத்தை நோக்கி ரஹானேவும் ஆடிக்கொண்டிருந்த நிலையில், ரோஹித்தை 161 ரன்னில் வீழ்த்தி ஜாக் லீச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ரோஹித் அவுட்டான அடுத்த ஒருசில ஓவர்களிலேயே ரஹானே 67 ரன்னில் ஆட்டமிழந்தார். அஷ்வினும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 300 ரன்கள் அடித்திருந்தது. 

முதல் நாள் ஆட்டத்தை முடித்த ரிஷப் பண்ட்டும் அக்ஸர் படேலும் இணைந்து 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரிஷப் பண்ட் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் அக்ஸர் படேல்(5), இஷாந்த் சர்மா(0), குல்தீப் யாதவ்(0), முகமது சிராஜ்(4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 4 விக்கெட்டுகளையும், ஆலி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் ஓவரின் 3வது பந்திலேயே இஷாந்த் சர்மா டக் அவுட்டாக்கி அனுப்பினார். இதையடுத்து சிப்ளியுடன் லாரன்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

click me!