கோலி கேப்டனா இருந்திருந்தால் ஆஸி.,யில் இந்தியா டெஸ்ட் தொடரை ஜெயிச்சுருக்காது..! முன்னாள் வீரர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 10:24 PM IST
Highlights

ரஹானே கேப்டனாக இருந்ததால் தான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது என்றும், ஒருவேளை கோலியின் கேப்டன்சியில் ஆடியிருந்தால் தொடரை வென்றிருக்க முடியாது என்றும் முன்னாள் வீரர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். 

கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகக்கவனமாக செயல்பட்டு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் ரஹானே, இந்த தொடரிலும் அதை செய்தார். அதுவும், ஷமி, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், அஷ்வின் என அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயத்தால் தொடர்ச்சியாக வெளியேறியபோதிலும், அனுபவமற்ற வீரர்களை வைத்துக்கொண்டு, அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, சிறப்பான களவியூகங்களை அமைத்து, ஆஸி., அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்டார் ரஹானே.

களவியூகம், ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாண்ட விதம், காயத்தால் வெளியேறிய வீரர்களுக்கு மாற்று வீரர்களாக யார் யாரை இறக்கலாம் என்று எடுத்த முடிவு என அனைத்திலும் ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டதால்தான், இந்த வெற்றி சாத்தியமாயிற்று.

ரஹானேவின் கேப்டன்சியையும், அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய விதத்தையும் பார்த்த முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கலாம் என்று வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், ரஹானே கேப்டன்சியில் இந்திய அணி ஆடியதால் தான் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடிந்தது என்றும், ஒருவேளை கோலியே கேப்டனாக இருந்திருந்தால், டெஸ்ட் தொடரை வென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய முன்னாள் வீரர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 
ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அசோக் மல்ஹோத்ரா, விராட் கோலி சூப்பர் ஸ்டார். அவர் தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால் ரஹானே ஆஸி.,யில் இந்திய அணியை வழிநடத்திய விதம், கோலி மீதான கேப்டன்சி அழுத்தத்தை அதிகரித்துள்ளது. ரஹானே கேப்டனாக செயல்பட்டதால் தான் ஆஸி.,யில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஒருவேளை கோலி கேப்டனாக இருந்திருந்தால் தொடரை வென்றிருக்காது.

ஏனெனில் புஜாரா, அஷ்வின் மாதிரியான வீரர்கள் எல்லாம் கோலிக்கு பக்கத்தில் கூட போகமாட்டார்கள். ஆனால் ரஹானே சூப்பர் ஸ்டாரெல்லாம் இல்லை; சாதாரண வீரர் என்பதால், அவர் கேப்டனாக இருக்கும்போது அவரை மற்ற வீரர்களால் எளிதாக அணுக முடிகிறது என்று அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!