#BBL ஃபைனலில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்ற சிட்னி சிக்ஸர்ஸ்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 5:53 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் ஃபைனலில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.
 

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் ஃபைனல் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடந்தது. டாஸ் வென்ற ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் ஃபிலிப் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டேனியல் ஹியூக்ஸ்(13), கேப்டன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ்(18) என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் ஜேம்ஸ் வின்ஸ் நிலைத்து நின்று அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகம் குறையாமல் சீரான வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய வின்ஸ், 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஐந்து ரன்களில் சதத்தை தவறவிட்டார். 60 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் அடித்தார். வின்ஸின் அதிரடியால் 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்து 189 ரன்கள் என்ற கடின இலக்கை பெர்த் ஸ்கார்ச்சர்ஸுக்கு நிர்ணயித்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.

189 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரும் நன்றாக ஆடினர். பான்க்ராஃப்ட் 30 ரன்னும், லிவிங்ஸ்டோன் 45 ரன்னும் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் காலின் முன்ரோ(2), ஜோஷ் இங்லிஷ்(22), மிட்செல் மார்ஷ்(11), கேப்டன் அஷ்டான் டர்னர்(11) ஆகியோர் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணியின் ரன்வேகம் உயரவில்லை. அதனால் 20 ஓவரில் 161 ரன்கள் மட்டுமே அடித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 3வது முறையாக பிக்பேஷ் லீக் கோப்பையை வென்றது. பிக்பேஷ் லீக்கின் முதல் சீசனில் கோப்பையை வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி தான், கடந்த சீசனிலும் டைட்டிலை வென்றது. இந்நிலையில், 3வது முறையாக பிக்பேஷ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.
 

click me!