இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில், ஒரு கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவசரப்பட்டு அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு சுப்மன் கில் களமிறங்கினார். இவரும், வந்த உடனே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் எடுக்க, ரோகித் சர்மா, 83 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 52 ரன்களுடன் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் ரோகித் சர்மா கூடுதலாக 51 ரன்கள் சேர்க்க டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்ததன் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
மேலும், அனைத்து பார்மேட்டுகளிலும் 1000 ரன்களை கடந்த 6ஆவது வீரர் எண்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு கேப்டனாக 1000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளார்.