இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைத்தது. இதையடுத்து அவர் 7 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி பல சாதனைகளை படைத்தார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் போட்டிகள் ஒரு அரையிறுதிப் போட்டி என்று எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில் முகமது ஷமிக்கு சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
இந்த உலகக் கோப்பைத் தொடரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முழு உடல் தகுதி பெறாத நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகினார். இதுவரையில் இந்த தொடரிலும் இடம் பெறாத ஷமி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த நிலையில் தான் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஷமியிடம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷமியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரப்பிரதேச மாநில ஆளும் பாஜக அரசு அடிக்கல் நாட்டியது.
ஷமி மற்றும் பாஜக இடையில் நல்லுறாவு இருக்கும் நிலையில், ஷமி மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.