இந்திய கிரிக்கெட் வீரர்கள் காயமடைவதற்கு ஐபிஎல் காரணமில்லை என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல் முடிந்து 10 நாளில் ஜூன் 7ம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்குகிறது. ஜூன் 7 தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி தோற்று கோப்பையை இழந்ததால் இந்த ஃபைனலில் ஜெயிப்பது முக்கியம்.
அதைத்தொடர்ந்து ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளது. இந்த ஆண்டு முக்கியமான ஐசிசி கோப்பை போட்டிகள் இருப்பதால் அந்த தொடர்களில் அணியின் முக்கியமான பெரிய வீரர்கள் அனைவரும் ஆடவேண்டியது அவசியம். வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுவதால் பணிச்சுமை அதிகரிப்பால் அவர்களது ஃபிட்னெஸ் பாதிக்கப்படுகிறது.
டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளில் ஆடுவதுடன், ஐபிஎல்லிலும் இரண்டரை மாதங்கள் வீரர்கள் ஆடுவதால் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை. அதன்விளைவாகத்தான், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் அடிக்கடி காயமடைகின்றனர்.
2019 vs 2023 ஒருநாள் உலக கோப்பை..! அனைத்து அணிகளின் கேப்டன்களும் மாற்றம்.. கோப்பை யாருக்கு..?
பும்ரா மற்றும் ஜடேஜா கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பும்ரா இன்னும் குணமடையவில்லை. ஜடேஜா அறுவை சிகிச்சை முடிந்து இந்தியாவிற்காக ஆடியதுடன் ஐபிஎல்லிலும் ஆடிவருகிறார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் காயம் காரணமாக ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாமல் விலகிவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் முக்கியமான வீரராக திகழ்கிறார். காயத்தால் அவர் ஐபிஎல்லிலும் ஆடவில்லை.
அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளதால் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஷுப்மன் கில், ஷமி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகிய முக்கியமான வீரர்களின் ஃபிட்னெஸ் மிக முக்கியம். இவர்கள் இரண்டரை மாதம் ஐபிஎல்லில் ஆடிவிட்டு 10 நாள் இடைவெளியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடவேண்டும்.
இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் ஆடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடமையை ஆற்றாமல் ஓய்வெடுத்துக்கொள்கின்றனர். ஐபிஎல் முழு சீசனிலும் ஆடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வெடுப்பது விமர்சனத்துக்குள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர். இதுதொடர்பாக பிசிசிஐ திடமான முடிவெடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
IPL 2023: ஐபிஎல்லில் தவான் தனித்துவ சாதனை
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஐபிஎல் தலைவர் அருண் துமால், நமது நாட்டில் தனிநபரோ அல்லது நிறுவனமோ அதிகமாக சம்பாதித்தாலே பிரச்னை தான். விராட் கோலி ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஐபிஎல்லில் ஆடிவருகிறார். ஆனால் அவர் காயமடைந்ததில்லை. ஜடேஜா, ஷமி ஆகிய வீரர்களும் காயம் அடைவதில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைகிறார். ஆனால் அதற்கு ஐபிஎல் காரணமில்லை. வீரர்கள் ஐபிஎல்லில் ஆடி சம்பாதிப்பதால் மட்டுமே ஐபிஎல்லை குறைசொல்லக்கூடாது. நமது பேட்மிண்டன் வீரர்கள் காயமடைகிறார்கள். அவர்கள் என்ன ஐபிஎல்லிலா ஆடுகிறார்கள்? வெளிநாட்டு வீரர்கள் பலரும் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். அவர்கள் என்ன காயமா அடைகிறார்கள்? என்று அருண் துமால் கேள்வி எழுப்பியுள்ளார்.