NZ vs SL: ஒரே டெஸ்ட்டில் ஜெயசூரியா, டேனியல் வெட்டோரியின் சாதனைகள் காலி! ஆஞ்சலோ மேத்யூஸ், டிம் சௌதி புதிய சாதனை

By karthikeyan V  |  First Published Mar 9, 2023, 1:37 PM IST

நியூசுலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில், சனத் ஜெயசூரியாவை விட அதிக ரன்களை குவித்து ஆஞ்சலோ மேத்யூஸும், டேனியல் வெட்டோரியை விட அதிக விக்கெட் வீழ்த்தி டிம் சௌதியும் சாதனை படைத்துள்ளனர்.
 


இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி தொடர் இது. ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2வது அணியாக ஃபைனலுக்கு முன்னேற இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

அகமதாபாத்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி போட்டியில் ஜெயித்தால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும். ஒருவேளை இந்திய அணி தோற்றால், நியூசிலாந்தை 2-0 என ஒயிட்வாஷ் செய்தால் ஃபைனலுக்கு முன்னேறும்வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது. அதனால் அந்த அணி நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி முனைப்புடன் களமிறங்கியது.

Tap to resize

Latest Videos

Explainer: ICC WTC ஃபைனல்: இந்தியா-இலங்கை இடையே போட்டி! அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள், கணக்கீடுகள் ஓர் அலசல்

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் அடித்துள்ளது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான திமுத் கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஆடாமல் அடித்து ஆடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார். ஆஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களும், தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் அடித்தனர். டிக்வெல்லா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் அடித்துள்ளது.

இந்த இன்னிங்ஸில் 47 ரன்கள் அடித்த ஆஞ்சலோ மேத்யூஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டி சாதனை படைத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சனத் ஜெயசூரியாவை(6973) பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார் மேத்யூஸ். குமார் சங்கக்கரா(12400) மற்றும் மஹேலா ஜெயவர்தனே(11814) ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

ICC WTC: இந்திய அணிக்கு அச்சுறுத்தல்.. நியூசிலாந்தில் பட்டைய கிளப்பும் இலங்கை

இந்த போட்டியில் இலங்கை இழந்த 6 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டை டிம் சௌதி வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 362 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்திய டிம் சௌதி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பவுலர்கள் பட்டியலில் டேனியல் வெட்டோரியின் (361) சாதனையை முறியடித்து 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். 431 விக்கெட்டுகளுடன் ரிச்சர்ட் ஹாட்லி முதலிடத்தில் உள்ளார்.
 

click me!