ஷிகர் தவானின் இன்ஸ்கிராம் பதிவு பார்த்து, ஒரு அப்பனுக்கு தன் மகனை பார்க்காமல் இருப்பதைக் காட்டிலும் வேறு எந்த வேதனையும் பெரிதாக இருக்காது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தனது மகனை பார்க்க முடியாத நிலையில், அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். ஷிகர் தவான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல குழப்பமான காலத்தை கடந்து வருகிறார். ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆஷா முகர்ஜி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அக்டோபர் 4ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஜோராவர் என்ற மகன் உள்ளார். இவர்களின் திருமணத்துக்கு முன்பே ஆயிஷாவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருடன் திருமணமாகி, அவர்களுக்கு 2 மகள்களும் இருந்தனர். அந்த நபருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவில் தன்னுடன் வசிப்பதாக உறுதி அளித்ததன் பேரில்தான் ஷிகர் தவான் ஆயிஷாவை மணம் முடித்துள்ளார். ஆனால், ஆயிஷா சொன்னபடி நடந்துகொள்ளாமல் முன்னாள் கணவருடன் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார்.
தனது 2 மகள்கள் மற்றும் மகன் ஜோராவருடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியுள்ளார். இதனால் தனது மகனை பிரிந்து வேதனைக்கு உள்ளான ஷிகர் தவான், விவகாரத்து பெற முடிவு செய்து டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி ஷிகர் தவானுக்கு விவாகரத்து வழங்கப்படட்து.
அதோடு, தவானின் மகன் ஜோராவர் ஒவ்வொரு ஆண்டும் பாதி விடுமுறை நாட்களை தவான் மற்றும் தவானின் குடும்பத்தினருடன் செலவிடும் வகையில் ஜோராவை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று ஆயிஷாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமின்றி தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனைப் பார்க்கவும், இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாடவும் ஒத்துழைக்க வேண்டும் என ஆயிஷாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.
ஆனால், இதெல்லாம் நடக்காத நிலையில், ஜோராவரின் புகைப்படத்தை பகிர்ந்து தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் உன்னை நேரில் பார்த்து ஒரு வருடம் ஆகிறது, இப்போது, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக, நான் எல்லா இடங்களிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கிறேன், அதனால் என் பையனே, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அதே படத்தை பதிவிடுகிறேன்.
என்னால் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், டெலிபதி மூலம் உங்களுடன் இணைகிறேன். நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், நன்றாக வளர்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அப்பா, எப்போதும் உன்னை மிஸ் செய்கிறார், நேசிக்கிறார். அவர் எப்போதும் நேர்மறையாக இருக்கிறார், கடவுளின் அருளால் நாம் மீண்டும் சந்திக்கும் நேரத்திற்காக புன்னகையுடன் காத்திருக்கிறார். குறும்புத்தனமாக இருங்கள், கொடுப்பவராக இருங்கள், பணிவாகவும், இரக்கமுள்ளவராகவும், பொறுமையாகவும், வலிமையாகவும் இருங்கள்.
உங்களைப் பார்க்காவிட்டாலும், உங்கள் நல்வாழ்வு மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பற்றிக் கேட்டு, நான் என்ன செய்கிறேன் மற்றும் என் வாழ்க்கையில் என்ன புதியது என்பதைப் பகிர்ந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு செய்திகளை எழுதுகிறேன்.
லவ் யூ லோட்ஸ் ஜோரா ❤️
அப்பா….
என்று பதிவிட்டிருந்தார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷர் குமார் தனது வலிகளை பகிர்ந்து கொண்டார். ஒரு தந்தை தனது குழந்தை அல்லது மகனை பார்க்காமல் அல்லது சந்திக்காமல் இருப்பதை விட வேதனையானது எதுவுமில்லை. ஷிகர் தவான் மன வலிமையுடன் இருக்க வேண்டும். லட்சக்கணக்கானோர் ஷிகர் தவான் மற்றும் அவரது மகனுக்காக பிரார்த்தனை செய்வதாக அக்ஷர் குமார் கூறியுள்ளார். இதற்கு ஷிகர் தவான் நன்றி தெரிவித்துள்ளார்.