பாகிஸ்தானுக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முதல் அணியாக உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 31ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 56 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களும், லிட்டன் தாஸ் 45 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 74 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 3 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் வெளியேற, முகமது ரிஸ்வான் 26 ரன்னிலும், இப்திகார் அகமது 17 ரன்களும் எடுக்கவே பாகிஸ்தான் 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ODI World Cup Semi Finals: 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு யார் யாருக்கு இருக்கு?
இதே போன்று வங்கதேச அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில், 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. 13ஆவது உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்து வங்கதேச அணியானது முதல் அணியாக வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Pakistan vs Bangladesh: வேகத்தில் மிரட்டிய ஷாகீன் அஃப்ரிடி – வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல் அவுட்!
இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேச அணி ஒரு முறை கூட டைட்டில் வெற்றி பெறவில்லை. இவ்வளவு ஏன், 2ஆவது இடம் கூட பெறவில்லை.