தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று நடந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் விளையாடிய விதத்தை பார்க்கையில் 25 ஓவர்களில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியானது கடைசி வரை சென்று இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடி காட்டவே 6 ஓவர்களில் ஆஸ்திரேலியா 60 ரன்கள் குவித்தது.
வார்னர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 62 வரையில் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மார்னஷ் லபுஷேன் 18 ரன்களில் வெளியேற, மேக்ஸ்வெல் 1 ரன்களில் நடையை கட்டினார். ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜோஸ் இங்கிலிஸ் 28 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்த வெற்றியின் மூலமாக 8ஆவது முறையாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதில், 5 (1987, 1999, 2003, 2007, 2015) முறை சாம்பியனாகியுள்ளது. தொடர்ந்து (1999, 2003, 2007) 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இதில், ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
தற்போது 2ஆவது முறையாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி வரும் 19 ஆம் தேதி அகமதபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
Breaking: நவம்பர் 19ல் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை! pic.twitter.com/4luoRRDlf5
— Asianetnews Tamil (@AsianetNewsTM)