டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில் 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணிக்கும் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று அந்த போட்டியில் இடம் பெற்று விளையாடிய முன்னாள் வீரர் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் மெரைன் டிரைவ் வந்து நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.
கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்திற்கு வரவேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு சென்ற ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு சார்பாக ரூ.11 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியானது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. ஆனால், அப்போது பிசிசிஐயிடம் போதுமான நிதி இல்லாத நிலையில், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.25,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்திய அணி வீரர்களுக்கு குறைவான பரிசுத் தொகை வழங்கப்பட்டது குறித்து அறிந்த மறைந்த பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் டெல்லியில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார். அதன் மூலமாக நிதி திரட்டி இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கினார்.
இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், 1983 ஆம் ஆண்டு டிராபி வென்ற இந்திய அணிக்கு அப்போது எந்த வெகுமதியு வழங்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களிடம் பணம் இல்லை என்று பிசிசிஐ அப்போது கூறியது. ஆனால் பிசிசிஐ இப்போது பரிசுத் தொகையை அறிவிக்கலாம். அவர்களிடம் இப்போது பணம் உள்ளது.
ரூ.125 கோடி என்பது பெரிய தொகை தான். இந்திய அணிக்கு மகிழ்ச்சி. சரி, அந்த நேரத்தில் 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு எங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. ஏனென்றால் எங்களிடம் பணமில்லை என்று பிசிசிஐ அப்போது கூறியது. ஆனால், இப்போது அவர்களால் முடியும். அவர்களுக்கு என்ன தடையாக இருக்கிறது.
அணியில் சில வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடுகிறார்கள், மற்றவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிசிசிஐ அதையும் பார்க்க வேண்டும் என்று 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் இது போன்று கூறியிருக்கிறார்.