தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 9 நாட்களில் உலகக் கோப்பை சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும் நிலையில் அரையிறுதிக்கான கடைசி இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன.
இதில், நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 23.2 ஓவர்களில்172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4ஆவது இடத்தில் நீடிக்கிறது. கிட்டத்தட்ட அரையிறுதிக்கு நெருங்கிவிட்ட நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும். இதே போன்று, வரும் 11 ஆம் தேதி நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்கள் எடுத்து 287 ரன்களில் வெற்றி பெற வேண்டும். சேஸிங் என்றால் 284 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற வேண்டும். அதாவது, 16 பந்துகளில் வெற்றி பெற வேண்டும். அப்படியும் இல்லையென்றால் இங்கிலாந்தை 50 ரன்களுக்குள் சுருட்டி 2 ஓவரில் வெற்றி பெற வேண்டும், 100 ரன்கள் என்றால் 3 ஓவரில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இதெல்லாம் சாத்தியமில்லை.
இன்னும் முழுசா அரையிறுதிக்கு தகுதி பெறாத நியூசிலாந்து; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்காக வெயிட்டிங்!
ஆகையால் நியூசிலாந்து அணி தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அப்படி நியூசிலாந்து அரையிறுதிக்கு சென்றால் இந்தியா – நியூசிலாந்து அணிகள் வரும் 15 ஆம் தேதி கொல்கத்தாவில் மோதும். இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து 4ஆவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், தோனியின் ரன் அவுட் போட்டியை திசை திருப்பியது. இந்தப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது.