தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கான கடைசி இடத்திற்கான போட்டியின் முக்கியமான ஆட்டம் இன்று நடக்கிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கிட்டும். தென் ஆப்பிரிக்கா விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அதோடு, அரையிறுதிக்கும் 2ஆவது அணியாக சென்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா!
இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற இது தான் கடைசி வாய்ப்பு. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியின் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மார்கோ ஜான்சென் மற்றும் தப்ரைஸி சம்ஷி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக கெரால்டு கோட்ஸி மற்றும் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கஜிசோ ரபாடா, ரஸிவ் வான் டெர் டுசென், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ.
ஆப்கானிஸ்தான்:
ஹஷ்மதுல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, முகமது நபி, இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக்.
இதற்கு முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஜெயிக்க வேண்டிய போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி இரட்டை சதத்தால் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஒரு சரித்திர வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாட இருக்கிறது.