
ரச்சின் ரவீந்திரா 18 நவம்பர் 1999 அன்று நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்தார். கடந்த 1997 இல் நியூசிலாந்தில் குடியேறுவதற்கு முன், அவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, ஒரு மென்பொருள் கட்டிடக் கலைஞர். பெங்களூரில் கிளப் அளவிலான கிரிக்கெட்டை விளையாடினார். அம்மா தீபா. இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது தீவிர ரசிகரான ரவி கிருஷ்ணமூர்த்தி, தனது மகனுக்கு ராகுல்+சச்சின் = ரச்சின் ரவீந்திரா என்று பெயர் சூட்டியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா!
தனது 5 வயது முதலே சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடும் விதத்தைப் பார்த்து கிரிக்கெட் மீது ஆசை கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூருவிற்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
இதுவரையில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 73 ரன்களும், 3 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 18 டி20 போட்டிகளில் விளையாடி 145 ரன்களும், 11 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். மேலும், 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 754 ரன்களும், 17 விக்கெட்டுகளும் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 123* ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலகக் கோப்பை தொடரில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 565 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பெங்களூருவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக கிட்டத்தட்ட அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. எனினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றியைப் பொறுத்து நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், பெங்களூருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற ரச்சின் ரவீந்திராவிற்கு அவரது பாட்டி திருஷ்டி சுற்றிப் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.