நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா இலங்கைக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் சேர்த்ததன் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருபவர் ஆல் ரவுண்டரி ரச்சின் ரவீந்திரா. இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது தீவிர ரசிகர் என்ற நிலையில், ரச்சின் ரவீந்திராவிற்கு அவரது பெற்றோர் ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயரிட்டுள்ளனர்.
இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் ரச்சின் ரவீந்திரா முறையே 123*, 51, 9, 32, 75, 116, 9, 108, 42 என்று மொத்தமாக 565 ரன்கள் குவித்துள்ளார். தனது அறிமுக உலகக் கோப்பைப் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த நிலையில், 8 போட்டிகளில் வரையில் மொத்தமாக 523 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருந்தார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 523 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் குவித்ததன் மூலமாக இந்த உலகக் கோப்பை தொடரில் 25 வயதிற்குள் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுலக்ர் சாதனையை முறியடித்துள்ளார்.
அதேபோல் அறிமுக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 11 இன்னிங்ஸ்களில் 532 ரன்கள் சேர்த்தார். இதனையும் ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பெங்களூருவில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்ற ரச்சின் ரவீந்திராவிற்கு அவரது பாட்டி திருஷ்டி சுற்றிப் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.