
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் தோனி, 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காகத்தான் ஆடினார். சூதாட்டப்புகார் காரணமாக அந்த 2 சீசன்களிலும் சிஎஸ்கே அணி தடைபெற்றிருந்தது.
சிஎஸ்கே அணிக்காக ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் அளப்பரிய பங்காற்றியிருக்கிறார் தோனி. சிஎஸ்கே அணியை ஒரு சீசனை (2020) தவிர ஆடிய மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு அழைத்து சென்ற தோனி, சிஎஸ்கே அணியை 9 முறைஃபைனலுக்கு அழைத்து சென்று அதில் 4 முறை கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே திகழ, தோனி தான் காரணம். ஐபிஎல் கோப்பை போக, 2 முறை சாம்பியன்ஸ் லீக் டிராபியையும் வென்று கொடுத்திருக்கிறார் தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் நிலையில், ஐபிஎல்லிலும் அவரது கெரியரின் முடிவில் உள்ளார். 15வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியை ஜடேஜாவை முதல் வீரராக தக்கவைக்க சொல்லிவிட்டு, தன்னை 2வது வீரராகவே தக்கவைக்க சொன்னார் தோனி. அதன்படி, தோனியைவிட அதிகமான தொகைக்கு ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
அப்போதே, ஜடேஜா தான் அடுத்த கேப்டன் என்று ஊகிக்கப்பட்டது. அதேபோலவே, வரும் 26ம் தேதி ஐபிஎல் 15வது சீசன் தொடங்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து இன்று விலகிவிட்டு, ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தார்.
எனவே இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். அதைத்தான் ஆகாஷ் சோப்ராவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறிய ஆகாஷ் சோப்ரா, தோனி சிஎஸ்கே அணியின் கிங். அவர் அடுத்த சீசனில் ஆடமாட்டார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். ஏலத்திற்கு முன் 2வது வீரராகத்தான் தோனி தக்கவைக்கப்பட்டார். அதிலேயே தெரிந்துவிட்டது என்றார் ஆகாஷ் சோப்ரா.