
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி போட்டி லாகூரில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்தது. அபாரமாக பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 91 ரன்கள் அடித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்கள் அடித்தார். அலெக்ஸ் கேரி 67 ரன்களும், கேமரூன் க்ரீன் 79 ரன்களும் அடிக்க, 391 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் 81 ரன்கள் அடித்தார். அசார் அலி 78 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 67 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் யாருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்கள் மட்டுமே அடித்தது.
121 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்தார். வார்னர் அரைசதம் அடித்தார். கவாஜா 104 ரன்களும், வார்னர் 51 ரன்களும் அடித்தனர். 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் அடித்த நிலையில், மொத்தமாக 348 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 4ம் நாள் ஆட்டத்தின் 3வது செசனில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.
2வது டெஸ்ட்டில் கடைசி இன்னிங்ஸில் 508 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. கடைசி 2 நாட்கள் முழுவதுமாக பேட்டிங் ஆடி 7 விக்கெட்டுகளை இழந்து 443 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. போட்டி டிராவில் முடிந்தாலும், பாகிஸ்தான் அணி அந்த கடின இலக்கை விரட்டிய விதம் அபாரமானது. பாகிஸ்தான் அணி அப்படியொரு அபாரமான இன்னிங்ஸ் ஆடியும், கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து 351 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
351 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்ட தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி, 4ம் நாள் ஆட்டத்தின் 27 ஓவர்களையும் முழுவதுமாக பேட்டிங் ஆடி விக்கெட் இழப்பின்றி 4ம் நாள் ஆட்டத்தை முடித்தனர். 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 73 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 278 ரன்கள் தேவைப்படுகிறது. ஷாஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் களத்தில் செட்டில் ஆகி நன்றாக ஆடிவருகின்றனர். அசார் அலி, பாபர் அசாம் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே கடைசி நாள் ஆட்டத்தில் 278 ரன்களை பாகிஸ்தான் அணி அடித்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.