புதுச்சேரி லோக்சபா தொகுதியில் யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டையொட்டி அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி, பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் 30 சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இதுவரை புதுச்சேரியில் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில், 11 முறை வென்று, புதுச்சேரியை தமது கோட்டையாக தக்கவைத்து கொண்டுள்ளது காங்கிரஸ்.
அதுமட்டுமில்லாமல், பிற கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணி, இண்டியா கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என மூன்று கூட்டணி வேட்பாளர்கள் தேர்தலில் களத்தில் உள்ளனர். முக்கியமாக மும்முனை போட்டி உருவாகியுள்ளது. கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
undefined
அவர் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் 2வது முறையாக மக்களவைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார். அதேநேரத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அதிமுக சார்பில் புதுச்சேரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் களத்தில் உள்ளார்.
நியூஸ்18 மெகா எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளின்படி, புதுச்சேரியில் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) சிட்டிங் எம்.பி வி வைத்திலிங்கம் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளது. அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட நமச்சிவாயம் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!