புதுச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளின் வீடுகளை பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் சூறையாடியதால் போலீஸ் குவிப்பு.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) விக்கி(வயது 31). ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். இவர் நேற்று மாலை அவரது வீட்டின் அருகே நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மர்ம நபர்கள் மணிகண்டனின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஒதியஞ்சாலை காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அசோக், பரணி, ஸ்ரீகாந்த் ஆகிய 4 வாலிபர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
இந்நிலையில் மணிகண்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4-பேரின் வீடுகளை கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அதனை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி சோனாம்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் இன்று மலை அடக்கம் செய்ய உள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.