புதுவை மத்திய பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி தர்ணாவில் ஈடுபட்ட பேராசிரியரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி லாஸ்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் வொகேஷனல் பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் முனைவராக பணிபுரிபவர் சத்தியநாராயணன்.
இவர் 2009ம் ஆண்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் லாஸ்பேட்டில் இயங்கும் சமுதாய கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். தனது பேராசிரியர் பணியில் நேர்மையாக பணியாற்றி வரும் முனைவர் சத்திய நாராயணனுக்கு அங்கு பணிபுரியும் சில பேராசிரியர்கள் பணியின் போது தொந்தரவு கொடுத்து வருவதாகவும், மேலும் இந்த கல்லூரியில் முதல்வராக இருக்கும் லலிதா ராமகிருஷ்ணன், சத்ய நாராயணனுக்கு பல்வேறு இடையூறுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரிப்பு; முகக்கவசம் அணிவது கட்டாயம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மேலும் அவ்வபோது கல்லூரியில் பணி செய்யாமல் பொழுதை கழிக்கும் பேராசிரியர்கள் குறித்தும், கல்லூரி முதல்வர் குறித்தும் காவல் நிலையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புகார் கடிதமும் எழுதி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணனுக்கும், சத்ய நாராயணனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யநாராயணன் மருத்துவ செலவுகள் வழங்கக்கோரி மனு அளித்திருந்தார். இந்த மனு மீது கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இன்று முனைவர் சத்யநாராயணன் சமுதாய கல்லூரியில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதி? உதயநிதி மறுப்பு
இதனை அடுத்து பேராசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணனை மாணவர்கள் முற்றுகையிட்டு சரமாரியான கேள்விகளைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லாஸ்பேட்டை காவல் துறையினர் பேராசிரியர் சத்யநாராயணனை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் கல்லூரி மாணவ மாணவிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேராசிரியர் சத்யநாராயணன் கூறும்பொழுது, சமுதாய கல்லூரியில் சாதிரீதியிலான ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர் தன்னை இந்த கல்லூரியில் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.