அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தரவேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளை தொடர்ந்து பார்வையிட்டு வரும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டார். பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடினார். மேலும் மாணவர்களோடு சேர்ந்து ஸ்மார்ட் வகுப்பறையை கவனித்தார்.
டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்களைப் பாராட்டினார். மேலும் மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதிய உணவைப் பரிமாறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தும்போது அது மக்களுக்கு நன்றாக சென்றடையும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். பாரத தேசத்தில் எந்த அங்கீகாரம் வேண்டும் என்று பெண்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்களோ அந்த 33% இட ஒதுக்கீடு வழங்க பாரதப் பிரதமர் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும். பெண்கள் மூலம் சமுதாயம் பயனடைவிற்கும், பலனடைவதற்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசுகையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, வாக்காளர்களில் ஏறக்குறைய 50% ஆக இருக்கும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் புதுச்சேரி மாநிலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழகத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களும் பெண்களாக இருப்பார்கள்.
தமிழகத்தில் 13 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். இது மிகப்பெரிய வாய்ப்பு. அதற்காக பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துணைநிலை ஆளுநராக உண்மையாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
பணியில் இல்லாத அரசு மருத்துவர்; அஜாக்கிரதையால் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்
பெண்களுக்கான உதவித்தொகை குறித்து, என்னிடம் வரும் கோப்புகளின் அடிப்படையிலும், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவலைகளின் அடிப்படையிலும் தான் கூறுகிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநராக மக்கள் பணியை தான் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல எண்ணத்தோடு ஒரு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அது தொடங்கப்பட்டிருக்கிறது. அதைப் பாராட்ட வேண்டும். சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது தொடங்கி 75 பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று குறிக்கோளோடு பார்வையிட்டு வருகிறேன். அப்போது அரசு பள்ளி மாணவர்களின் அறிவாற்றலைக் கண்டேன். அந்த பள்ளி குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிகவும் கடுமையாக முயற்சி செய்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10% இட ஒதுக்கடை பெற்றிருக்கிறோம்.
அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன்தர வேண்டும் என்பது என்னுடைய அடிப்படையான ஆசை என்று தெரிவித்தார்.