புதுச்சேரியில் ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சியான திமுக பேசினால் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்வேன் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மறைமலை அடிகள் சாலை, புதிய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் வரலாறு என்பது தமிழ் மக்களின் உயர்வுக்கான அடைப்படை ஆதாரமாகும். சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை, மக்கள் உரிமை உள்ளிட்ட உயர்ந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரர் இவர். நாடுமுழுவதும் ஆதிக்க சக்தியாக இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1968-ல் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை அகற்றியவர்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகாலம் ஆகிய நிலையில் இன்று வரை தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அப்படிப்பட்ட பேரறிஞர் அண்ணாவால் துரத்தியடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியோடு இன்று கூட்டணி அமைத்து பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு துரோகத்தை திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் செய்து வருகிறார்.
வேகமெடுக்கும் டெங்கு; அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு
அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழக அரசு இன்று ஆரம்பிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதியின் பெயரை சூட்டி வருகிறார். பெயரளவுக்கு கூட எந்த திட்டத்திற்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை சொல்லுவது கிடையாது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் தகுதி திராவிட முன்னேற்ற கழகத்திற்கோ, அதன் தலைவர் ஸ்டாலினுக்கோ இல்லை.
இப்போது நாட்டில் சனாதான சட்டமே இல்லாத இக்காலத்தில் இல்லாத சனாதானத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்து மதத்தை கேவலப்படுத்துவதும், ஓட்டு வங்கிக்காக இந்து மதம் இல்லாத பிற மதத்தினரை சந்தோஷப்படுத்துவதிலும் காலத்தை ஓட்டுகின்றனர். கேவலம் ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேஷத்தை மக்களிடம் திமுக கொண்டுசெல்கிறது. உதயநிதி என்று ஒரு விளையாட்டுபிள்ளை சனாதானத்தை உரசிப்பார்க்கிறது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் செயலற்ற தன்மை அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை, மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் சூழ்நிலை இவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள தமிழக முதலமைச்சர் எஸ்டாலின் சனாதன பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
அதே போல் புதுச்சேரியில் உள்ள திமுகவை சேர்ந்த அமைப்பாளர் சிவா நெற்றியில் விபூதியை வைத்துக்கொண்டு சனாதானத்தை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் இவர்களது பேச்சால் துன்பப்படும் அலவிற்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் திமுக ஆளுங்கட்சியை எதிர்த்து பேசுவதில்லை. அப்படி அவர்கள் பேசிவிட்டால் தனது ஒரு பக்க மீசை எடுத்து விடுகிறேன் என சவால் விடுத்த அன்பழகன். ஆளுங்கட்சிக்கு நிழல் முதலமைச்சராக எதிர்கட்சித் தலைவர் சிவா செயல்பட்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது. எந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இவர் முதலமைச்சராகவே வலம் வருவார் என குற்றம் சாட்டி பேசினார்.