புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு மாணவி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பொதுமருத்துவமனைகளில் டெங்கு நோய் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. ரத்த வங்கியும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரம் மக்களின் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் இருந்தால் இந்த டெங்கு நோயை எதிர்கொள்ளலாம்.
கேரளாவில் இருந்து வருபவர்கள் நிபா அறிகுறியுடன் வந்தால் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மழை காலத்திற்கு முன்பாக டெங்கு பாதிப்பு அதிகரித்து விட்டது. இந்த நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மிகவும் கடுமையாக போராடி வருகிறது. டெங்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப் படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளியின் பஞ்சர் கடையில் கம்பிரசர் வெடித்து திடீர் விபத்து; 4 பேர் படுகாயம்
மேலும் வாரம் ஒரு முறை வீடுகளை சுத்தப்படுத்தி உலர்தினம் ( Weekly Dengue Day- Dry day) கடைப்பிடிப்பதன் மூலம் கொசு புழுவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். இதன் மூலமாக டெங்கு பரவுவதை தடுக்க இயலும். இந்த டெங்கு ஒழிப்பு பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர் நற்பணி மன்றங்கள் முதலான மக்கள் சேவை இயக்கங்கள் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு புதுச்சேரி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.