புதுச்சேரியில் இளைஞர்கள் வேலையின்மையால் திண்டாடி வருவதை உணர்த்தும் விதமாக பட்டமளிப்பு விழா கோட்டுகளை அணிந்து தள்ளுவண்டியில் பஜ்ஜி, போன்டா விற்று இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை தேசிய வேலையின்மை தினமாக கொண்டாடப் போவதாக புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் அறிவித்து இருந்தனர். அதன்படி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே கண்டன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸார் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் அணியும் கோட்டுகளை அணிந்து தட்டு வண்டியில் வடை, பஜ்ஜி, போண்டா, பகோடா மற்றும் டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து வேலையின்மை திண்டாட்டத்தை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும்பொழுது 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை 35 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
பொய்யான வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி பிறந்த நாளை தேசிய வேலை இன்மை தினமாக கொண்டாடி பிரதமர் நரேந்திர மோடியை போன்றே இன்று பஜ்ஜி போண்டா, பக்கோடா, டீ போட்டு கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். புதுச்சேரியில் உள்ள அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.