"ஓபிஎஸ் முதல்வராக இருக்கும் போது அமைச்சர்கள் இப்படி பேட்டி கொடுக்கலாமா?" - ஆளுனருக்கு ஸ்டாலின் கேள்வி

First Published Jan 2, 2017, 3:05 PM IST
Highlights


முதலமைச்சராக ஓபிஎஸ் இருக்கும் போதே அவரது அமைச்சரவை சகாக்கள் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது அவருக்கு மெஜாரிட்டி இருக்கிறதா எனபதை ஆளுநர் உறுதிபடுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தமிழக முதலமைச்சராக தேர்வு செய்தார்கள்.

 அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது. 

தமிழக ஆளுநர் அவர்களும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, “ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார்” என்றும், “சசிகலா முதலமைச்சராக வேண்டும்” என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இப்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பித்துரை   அறிக்கை விடுத்துள்ளார்.

“தமிழக முதலமைச்சர் பதவியை” சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் அவர்கள் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, “சசிகலா முதல்வராக வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!