பொன்னையன் முன்பு மாதிரி இல்லை, ஒரு மாதிரி ஆகிவிட்டார் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நீர்வளத்துறை சார்பில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கங்களுடன் தமிழக அரசின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், “நேற்று காலையும், மாலையும் முதல்வர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசினேன். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து சிறிது நேரம் முன்புதான் சொன்னார்கள்.
இதையும் படிங்க: ஆடியோ அரசியல்.. இபிஎஸ் ஆதரவு தலைவர்களை நாரடித்த பொன்னையன்.. பொன்னையனுக்கும் அன்வர் ராஜா கதியா.?
வீட்டில் இருந்தால் இடையூறுகள் இருக்கும் என்பதால் மருத்துவனையில் சேர்ந்திருப்பார். முதல்வர் ஸ்டாலின் மூன்று தவனை தடுப்பூசிகளும் செலுத்தி இருக்கிறார்.” என்று துரைமுருகன் தெரிவித்தார். மேலும் துரைமுருகன் கூறுகையில், “உலக வங்கியிடம் நிதியைப் பெற்று கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக இன்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது. விவசாயிகள் இடையே இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் இருக்கின்றனர். இதுதொடர்பாக விவசாயிகளிடம் பேசியிருக்கிறோம். அடுத்து ஒரு முறை அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பொன்னையன் பைத்தியகாரர் மாதிரி பேசுகிறார். அதிமுகவின் கே.பி. முனுசாமியின் குவாரிக்கு நாங்கள் ஒரு முறை சீல் வைத்திருக்கிறோம்.
இதையும் படிங்க: எல்லாமே சாதி தான்.. அவர் கையில அதிமுக இருக்கு.. எடப்பாடி பாவம்.! பொன்னையன் பேசும் வைரல் ஆடியோ
போன மாதம் புதியதாக 20 குவாரிகள் டெண்டர் விடப்பட்டன. அதில் அதிகபட்ச தொகை செலுத்தி கே.பி. முனுசாமி குவாரி எடுத்திருக்கிறார். பொன்னையன் முன்பு மாதிரி இல்லை, ஒரு மாதிரி ஆகிவிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை. அரசியலில் இது போல சொல்வது வழக்கம்தான்.” என்று துரைமுருகன் தெரிவித்தார். நேற்று முன் தினம் பொன்னையன் பேசிய ஆடியோ வெளியானதில், “கே.பி. முனுசாமி துரைமுருகனை பிடித்து பங்க் வாங்கி, மாதம் ரூ.2 கோடி சம்பாதிக்கிறார். அதிமுக தொண்டர்கள்தான் தடுமாறுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் இது தொடர்பாக பதில் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சி.வி சண்முகத்தை பத்தி நான் அப்படி சொல்லவே இல்ல.. அவரு ரொம்ப துடிப்பான இளைஞர்.. அலறும் பொன்னையன்.!