ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ‘முரசொலி’.. கட்சியை விட்டு தூக்கி பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

By Asianet TamilFirst Published Jul 14, 2022, 9:46 PM IST
Highlights

ஒபிஎஸ் மகனை கட்சியை விட்டு நீக்கவில்லை என்று ‘முரசொலி’ கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் உள்பட 17 பேரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
 

சென்னையில் ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டவுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவி முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை.? பதில் சொல்லுங்க பழனிச்சாமி.. ‘முரசொலி’ சுளீர் கேள்வி!

மேலும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய விவகாரத்தில் ஓபிஎஸ்ஸையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு திமுகவின் கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யில் சிலந்தி கட்டுரை மூலம் பதிலடி கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில், “ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வையும் கருணாநிதியையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிச்சாமி கூட்டம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை? 

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு அவரது ஆட்சியைப் பாராட்டிப் பேசியது தவறு - என்று பேசினீர்களே; அறிக்கைகள் வெளியிட்டீர்களே ; பன்னீர் செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுக்களில், அவரது மகன் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியதும் ஒன்றல்லவா? அப்படி இருக்க ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கையில்லை? அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை? பழனிச்சாமி கூட்டம் பதிலளிக்குமா?” என்று முரசொலியில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெய பிரதீப் உள்பட 17 பேரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று நேற்று முன் தினம் ‘முரசொலி’ கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதன் மூலம் திமுக ‘முரசொலி’யில் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: PA மூலம் OPS கொடுத்து அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்துச்சு.. ஆக்ஷன் எடுப்பேன்... மாஸ் காட்டிய அப்பாவு.

click me!