சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் எதற்கு போலீஸ் பாதுகாப்பு...? - அரசியல் கட்சியினர் கேள்வி

First Published Dec 28, 2016, 10:43 AM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதன் பிறகும் சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட்டில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அவர் வசித்து வந்த  போயஸ் கார்டன் வீட்டில் 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னாள் முதல்வர் வசித்தார் என்பதற்காக அந்த  வீட்டுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, போயஸ் கார்டனுக்கான  பாதுகாப்பை குறைக்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் குறைக்கப்பட்டு, தனியார்  கம்பெனி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஜெயலலிதா எப்போதாவது ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் பங்களா,  கோடநாடு எஸ்டேட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூர் அருகே, சிறுதாவூரில் சுமார் 116 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த  வளாகத்தில் 17,200 சதுரடியில் கட்டப்பட்ட பங்களா அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி, வேர்க்கடலை,  நெல், சவுக்கு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது.

பங்களாவின் பின்புறம் மற்றும் முன்புறம் மீன்கள் வளர்ப்பதற்கான குளமும் உள்ளது. இந்த  பங்களா பாதுகாப்புக்கு என காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 250  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பங்களா நுழைவு வாயில் மட்டுமின்றி 16 இடங்களில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்,  ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

ஒரு ஷிப்டுக்கு 32 பேர் என ஒரு நாளைக்கு 96 பேர் பணியில் உள்ளனர். இதில் 2 பெண் காவலர்களும் உள்ளனர். இவர்கள் தங்குவதற்கு  காலவாக்கத்தில் ஒரு சமுதாய கூடமும், ஆலத்தூரில் உள்ள சாரண பயிற்சி மையமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வேலை பார்க்கும்  போலீசாருக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லை. வெட்ட வெளியாக இருக்கும். இதனால், இங்கு பணியாற்றுவதற்கு போலீசார் விரும்புவதில்லை.  ஆனாலும், முதலமைச்சரின் வீட்டில் பாதுகாப்பு என்பதால் வேறு வழியின்றி பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி  ஜெயலலிதா இறந்தார். அதன்பிறகும், சிறுதாவூர் பங்களாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே  ஜெயலலிதா சென்னையில் தங்கினால், சிறுதாவூர் பங்களாவில் ஏன் பாதுகாப்பு என பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பினர்.  தற்போது ஜெயலலிதா இறந்த பிறகும், யாரும் வசிக்காத பங்களாவுக்கு ஏன் அரசு பாதுகாப்பு தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி  எழுப்பியுள்ளனர்.

அதேபோல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு வந்து ஓய்வு எடுப்பது வழக்கம். ஓய்வு  நாட்களில் எஸ்டேட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் தமிழக அரசை வழிநடத்தினார். இவருடன், தோழி சசிகலா மற்றும் சசிகலாவின்  உறவினர் இளவரசி ஆகியோரும் உடன் இருப்பார்கள். இங்கு, ஜெயலலிதா அடிக்கடி வந்து சென்றதால் இச்சாலை மட்டும் பளபளப்புடன்  காணப்படும். அத்துடன், வழிநெடுக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

துப்பாக்கி ஏந்திய போலீசாரும்  பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். கோடநாடு எஸ்டேட்டில் ஏழு கேட் உள்ளது. இதன் ஒவ்வொரு கேட்டிலும் ஒரு இன்ஸ்பெக்டர்  தலைமையில் இரண்டு எஸ்.ஐ,, பத்து போலீசார் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி அளவிலான அதிகாரிகளும்  இருப்பார்கள். 

24 மணி நேரமும் எஸ்டேட் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் 5 உளவுத்துறை போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு  பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர், கருப்பு படை போலீசார் என 150 பேர் பணியில் இருப்பார்கள். ஜெயலலிதா இறப்புக்கு பின்னரும் இந்த  பாதுகாப்பு நடவடிக்கை தொடர்ந்தது. ஆனால், நேற்று கோடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த குறைந்த அளவு போலீஸ் மட்டும்  திரும்ப பெறப்பட்டது.

அவர்களுக்குப் பதில் தனியார் செக்யூரிட்டி வரவழைக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அதேநேரத்தில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு யாருமே இல்லாத இடங்களுக்கு பாதுகாப்பு பணியில்  போலீசார் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். போலீசார் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பெருமளவு போலீசார் அங்கு  பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டிருப்பது ஏன் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

click me!